கள்ளக்குறிச்சி மாவட்டப் பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில், தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. சி. அருள் விக்னேஷ் நேற்று (வெள்ளிக்கிழமை, நவம்பர் 27) மாலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான தவெகவைச் சேர்ந்த சி. அருள் விக்னேஷ் அனுப்பிய ஆபாசக் குறுஞ்செய்தி தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ. ஷாநாஸிடம் கள்ளக்குறிச்சி மாவட்டப் பெண் ஆட்சியர் கடந்த நவம்பர் 23-ஆம் தேதி நேரடியாகப் புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில், எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது பாலியல் துன்புறுத்தல், பாலியல் ரீதியான கருத்துகளைத் தெரிவித்துத் துன்புறுத்தல், பின்தொடர்ந்து துன்புறுத்தல், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் தமிழ்நாடு மகளிர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் நவம்பர் 24-ஆம் தேதி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி, அருள் விக்னேஷ் வீட்டிற்குச் சென்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை வழங்கினார்.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நவம்பர் 24-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, விசாரணை அதிகாரியாகத் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங்கையும், கண்காணிப்பு அலுவலராகச் சென்னை டி.ஜி.பி. அலுவலக நிர்வாகப் பிரிவு ஐ.ஜி. என். காமினியையும் நியமித்தது.

இதனையடுத்து நவம்பர் 25-ஆம் தேதி கள்ளக்குறிச்சிக்கு வந்த எஸ்.பி. சிருஷ்டி சிங், வழக்குக் கோப்புகளைப் பெற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் ஆட்சியரிடம் விசாரணை நடத்தினார். நவம்பர் 26-ஆம் தேதி காலை ஐ.ஜி. காமினி மற்றும் எஸ்.பி. சிருஷ்டி சிங் ஆகியோர் மீண்டும் ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் விசாரணை நடத்தி விவரங்களைப் பதிவு செய்தனர்.

இதனிடையே, கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு நவம்பர் 26-ஆம் தேதி பிற்பகலில் வந்த மாவட்ட ஆட்சியர், விரைவு நீதிமன்றக் குற்றவியல் நீதித்துறை நடுவர் சுவாதி அழகப்பன் முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து விசாரணை அதிகாரி எஸ்.பி. சிருஷ்டி சிங்கும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

மேலும், வழக்கின் அடுத்தகட்டமாகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் கணவரும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியருமானவரிடம் தியாகதுருகத்தில் உள்ள பயணியர் மாளிகையில் எஸ்.பி. சிருஷ்டி சிங் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணை நிறைவடைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று (நவம்பர் 27) மாலை எம்.எல்.ஏ.வைக் கைது செய்யும் நடவடிக்கையைக் காவல்துறை மேற்கொண்டது. இதையொட்டி, கள்ளக்குறிச்சி கச்சிராப்பாளையம் சாலையில் உள்ள எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் வீட்டின் முன்பு 75-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

மாலை 6 மணிக்கு மேல் அருள் விக்னேஷ் வீட்டிற்குள் சென்ற எஸ்.பி. சிருஷ்டி சிங் மற்றும் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. கலையரசன் தலைமையிலான போலீசார், ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கைது செய்வதாகக் கூறி அவரைப் பாதுகாப்புடன் காவலர் வாகனத்தில் ஏற்றினர். தொடர்ந்து தியாகதுருகத்தில் உள்ள பயணியர் மாளிகைக்கு அவரை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.