தென்காசி அருகே இரவு மதுபோதையில் தாயை அடித்து உதைத்த அண்ணனை, தம்பி மண்வெட்டிக் கணையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை அருகே உள்ள சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி தட்டாங்குளம் நாடார் தெருவைச் சேர்ந்தவர் ராமர் என்பவரின் மகன்கள் சுப்பிரமணியன் (30), முத்துக்குிருஷ்ணன் (28). ராமரின் இறப்புக்குப் பிறகு, மாற்றுத்திறனாளி யான இவரது மனைவி தனது மகன்கள் இருவரையும் கவனித்து வந்துள்ளார்.
சுப்பிரமணியன் சுரண்டை பகுதியில் உள்ள ஒரு கோழி இறைச்சிக் கடையில் வேலை பார்த்து வந்த நிலையில், முத்துக்குிருஷ்ணன் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த சுப்பிரமணியன் தனது தாயிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் அவரை அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது.
இதைப் பார்த்த அவரது தம்பி முத்துக்குிருஷ்ணன் தனது அண்ணனைத் தடுத்துள்ளார். ஆனால் போதையின் உச்சத்தில் இருந்த சுப்பிரமணியன் தனது தம்பியையும் தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த முத்துக்குிருஷ்ணன் அங்கு கீழே கிடந்த மண்வெட்டிக் கணையை எடுத்துச் சுப்பிரமணியனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதில் சுப்பிரமணியன் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் அலறித்துடித்துத் தவறித் தரையில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அவரது சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்து ஊட்டி வந்து பார்த்துச் சாம்பவர்வடகரை போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி பார்வையிட்டனர்.
பின் உயிரிழந்த சுப்பிரமணியன் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காகத் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குிருஷ்ணனை கைது செய்தனர். மாற்றுத்திறனாளி தாயைத் தாக்கிய அண்ணனைத் தம்பி அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

