மதுரை தோப்பூரில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிலவரப்படி 57 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் புறநோயாளிகள் (OP) பிரிவு முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
மதுரை காமராஜர் சாலையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில்: "தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பணிகள் விரைவாக முடிக்கப்படாமல் நீண்ட காலமாகத் தாமதமாகி வருகிறது. எனவே, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தி, குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர உத்தரவிட வேண்டும்." எனக் கோரியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: கடந்த 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரை எம்பிபிஎஸ் (MBBS) படிப்பில் சேர்ந்த 5 பேட்ச் மாணவர்களும் இதுவரை தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தங்கிப் பயின்று வந்த நிலையில், தற்போது அவர்கள் அனைவரும் தோப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சொந்த வளாகத்திற்கு மாற்றப்பட்டு விட்டனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் முழுமையான புறநோயாளிகள் பிரிவு (Outpatient Department) வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் செயல்படத் திட்டமிடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிலவரப்படி எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒட்டுமொத்தக் கட்டுமானப் பணிகளில் 57 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
மத்திய அரசின் இந்த விளக்கத்தைப் பதிவு செய்துகொண்ட உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, இந்த மனு மீதான விசாரணையை முடித்துவைத்து உத்தரவிட்டது.

