தமிழ்நாடு எலெக்ட்ரிசிட்டி போர்ட் எம்பளாயீஸ் ஃபெடரேஷன் சார்பில் 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகம் தழுவிய கோரிக்கை விளக்க நுழைவு வாயில் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
தூத்துக்குடி மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பாகப் புதன்கிழமை மாலை இப்போராட்டம் நடைபெற்றது. இக்கோரிக்கை விளக்கப் போராட்டத்திற்கு அமைப்பின் திட்டத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் திட்டச் செயலாளர் அலெக்ஸாண்டர், பொதுச்செயலாளர் தோழர் சுடலை, திட்டச் செயல்தலைவர் சிவஞானம், திட்டப் பொருளாளர் தோழர் ஜெயச்சந்திரன் மற்றும் நகர்க் கோட்டச் செயலாளர் வில்சன் ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்கள்.
மின்வாரியத்தில் காலியாக உள்ள 65,000 அடிப்படைப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நீண்ட நாட்களாகப் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களைக் காலதாமதமின்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கேங்மேன் பணியாளர்களைக் கள உதவியாளர்களாகப் பதிவு உயற்றம் செய்ய வேண்டும்.
பகுதிநேர சுகாதாரப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். விடுபட்ட கேங்மேன்களுக்குக் காலதாமதமின்றி உடனடியாகப் பணி நியமன ஆணைகளை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

