கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகரில் இயங்கி வரும் முதல்வர் மருந்தகத்தில் 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இன்று வழக்கம்போல் அவர் பணிசெய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த சந்தோஷ் என்ற இளைஞர் திடீரெனத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த இளம்பெண்ணைச் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த இளம்பெண் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகப் பண்ருட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த பெண்ணை மீட்டுப் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இளம்பெண்ணைக் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்ற சந்தோஷை பொதுமக்கள் துரத்திப் பிடித்து பண்ருட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் குறித்துப் போலீசார் நடத்திய விசாரணையில், "இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சந்தோஷ் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும், அதற்கு அந்தப் பெண் சம்மதிக்காததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கத்தியால் குத்தியதாகவும்" சந்தோஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ள முதல்வர் மருந்தகத்திற்குள் புகுந்து பெண் ஊழியரைக் கத்தியால் குத்திய சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

