ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மஷாத் நகரில் இருந்து கெர்மன்ஷா நோக்கி 'செபெஹ்ரான் ஏர்லைன்ஸ்' (Sepehran Airlines) நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரகப் பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் ஓடுதளத்தில் இருந்து மேலேறிய சிறிது நேரத்திலேயே அதன் ஒரு டயர் கழன்று விழுந்தது.
இதனால் இன்ஜினில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, விமானம் முழுவதும் பயங்கரமாக அதிர்ந்தது. கடுமையான அதிர்வின் காரணமாக விமானத்தின் கேபின் பகுதியில் இருந்த உட்புற மேற்கூரைப் பகுதிகள் பெயர்ந்து பயணிகள் மீது கழன்று விழுந்தன.
மேலும், கைமுறை உடமைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் திடீரெனத் திறந்து கொண்டு, அதில் இருந்த பொருட்கள் பயணிகள் மீது விழுந்ததால் விமானத்தில் பெரும் பதற்றமும் அலறல் சத்தமும் நிலவியது. விமான ஓட்டுநரின் சுதாகரிப்பால், விமானம் உடனடியாக மீண்டும் மஷாத் விமான நிலையத்திற்கே திருப்பி விடப்பட்டுப் பத்திரமாகத் தரை இறக்கப்பட்டது.
ஆரம்பகட்டத் தகவலின்படி, பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரும் நல்வாய்ப்பாகக் காயமின்றித் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஈரான் விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கேபின் மேற்கூரை இடிந்து விழுந்த அதிர்ச்சி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

