அரசு நலத் திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் அட்டைக்குப் பதிலாக வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவது மிகவும் மோசமான, தீய நோக்கம் கொண்ட ஒரு சதித் திட்டம் என காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் லட்சக்கணக்கான மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக பாஜக மீது அதிருப்தியில் இருப்பவர்களின் பெயர்களே அதிகம் நீக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் நடுநிலையான தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்; ஆனால் அது மோடி அரசாங்கத்தின் ஊழியர்களின் கைகளில் உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்டால் வாக்குரிமை பறிபோகும்; இதன் மூலம் மக்கள் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் முறை மாறி, அரசாங்கமே தனக்கு வேண்டிய மக்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் அபாயம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
பஞ்சாயத்து ராஜ் திட்டங்கள், ரேஷன் பொருட்கள், ஓய்வூதியம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், வீட்டுவசதி, கல்வி உதவித்தொகை மற்றும் இடஒதுக்கீடு என அனைத்து நலத்திட்டங்களும் இதனால் பாதிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.
"இது தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான அரசியல் அல்ல; மாறாக, தேர்தல்களைத் திருடுவதற்கும், அதிகாரத்தில் நிரந்தரமாக நீடிப்பதற்குமான ஒரு ஏற்பாடு. ஏழைகளின் ஓய்வூதியத்தை வாக்காளர் அட்டையைக் கொண்டு பிணைக் கைதியாக மாற்ற அனுமதிக்க மாட்டோம்" என ராகுல் காந்தி தனது பதிவில் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

