திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை அடுத்த முறப்பநாடு அருகே உள்ள சென்னல்பட்டியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மகள் சுதா (32). திருமணமான இவர், கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். சுதா பாளையங்கோட்டை தெற்கு பஜார் ஆயிரத்தம்மன் கோவில் அருகே இயங்கி வரும் ஒரு தனியார் செங்கல் நிறுவன அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். இதற்காகத் தினமும் தனது ஊரில் இருந்து மொபட்டில் வேலைக்குச் சென்று வருவது வழக்கம்.

இன்று வெள்ளிக்கிழமை காலையிலும் வழக்கம்போல சுதா பணிக்குச் செல்வதற்காக மொபட்டில் புறப்பட்டு பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின்னால், கே.டி.சி. நகரில் இருந்து திருநெல்வேலி சந்திப்பை நோக்கித் தனியார் மினி பஸ் ஒன்று அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது.

நீதிமன்றம் அருகே சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் மினி பஸ் வந்தபோது, எதிர்பாராதவிதமாகச் சுதாவின் மொபட் மீது பலமாக மோதியது. இதில் மொபட்டை ஓட்டி வந்த சுதா தூக்கி வீசப்பட்டு, மினி பஸ்ஸின் அடியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். பஸ்ஸின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில், உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இவ்விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகப் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுதாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய தனியார் மினி பஸ் டிரைவரைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.