மேற்கு வங்க மாநிலம் புரூலியாவிலிருந்து மதுரை வழியாகத் திருநெல்வேலிக்கு வரும் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக நெல்லை சந்திப்பு ரயில்வே போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, நெல்லை சந்திப்பு ரயில்வே காவல் சார்பு ஆய்வாளர் பெருமாள் தலைமையில், தலைமைக் காவலர்கள் மாரிதுரை, கருப்பசாமி மற்றும் காவலர் விக்னேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இத்தனிப்படையினர் திண்டுக்கல் முதல் விருதுநகர் வரை ரயிலில் பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகளைத் தீவிர சோதனை செய்தனர்.

அப்போது முன்பதிவில்லாத பெட்டியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த வடமாநில வாலிபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சிகு பரதன் (23) என்பது தெரியவந்தது. அவர் வைத்திருந்த பையைச் சோதனை செய்தபோது, அதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 9 கிலோ 500 கிராம் கஞ்சா கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிகு பரதனைக் கைது செய்து அவரிடமிருந்த 9.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை ராமநாதபுரம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியிடம் ஒப்படைத்தனர். சமீபகாலமாக வடமாநிலங்களில் இருந்து நெல்லை சந்திப்பிற்கு வரும் ரயில்களில் ரயில்வே போலீசார் தொடர் சோதனைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.