நெல்லை - திருச்செந்தூர் இடையே தினமும் 4 முறை பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களைக் காயல்பட்டினம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் செல்லும் ஆன்மீக பக்தர்களுக்கும் இந்த ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

இந்நிலையில், நெல்லை – திருச்செந்தூர் ரயிலில் உள்ள கழிவறையின் கதவு மற்றும் அதன் அமைப்பில் போதிய மறைப்பு இல்லாத வகையில் பெரிய இடைவெளி காணப்படுகிறது. பயணிகள் இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ரயிலில் பயணிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிவறையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில், கதவில் உள்ள பெரிய இடைவெளியால் அவர்களின் தனியுரிமை கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் பெண் பயணிகள் கழிவறையைப் பயன்படுத்த கடும் சிரமத்தையும், பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கும் ரயில்வே நிர்வாகம், அடிப்படை வசதிகளை முறையாகப் பராமரிக்காமல் இருப்பது ஏன் எனப் பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனவே, பெண்கள் அச்சமின்றி கழிவறையைப் பயன்படுத்தும் வகையில் கதவின் இடைவெளியை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்றும், நெல்லை - திருச்செந்தூர் ரயிலில் உள்ள அனைத்துக் கழிவறைகளையும் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என்றும் பயணிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.