நடிகையும், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா தனது கணவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி மற்றும் குடும்பத்தினருடன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் மற்றும் மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

மக்களுக்குப் பிடித்தமான நல்ல கதைக்களம் அமைந்தால் மீண்டும் சினிமாவில் நடிப்பேன் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.பிரசித்தி பெற்ற திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில், நடிகையும் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா தனது கணவரும் திரைப்பட இயக்குநருமான ஆர்.கே. செல்வமணி மற்றும் குடும்பத்தினருடன் நேற்று காலை வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.

தரிசனத்தைத் தொடர்ந்து, கோவில் வரலாறு மற்றும் தல புராணம் குறித்துக் கோவில் ஊழியர்களிடம் நடிகை ரோஜா ஆர்வமுடன் கேட்டறிந்தார். மேலும், சுவாமி சன்னதி முன்பாக அமைந்துள்ள புகழ்பெற்ற இசைத் தூண்களைப் பார்வையிட்ட அவர், அவற்றைத் தட்டிப் பார்த்து அதிலிருந்து எழுந்த இனிய ஸ்வரங்களைக் கேட்டு மகிழ்ந்தார்.

இதனையடுத்து, நெல்லை அருகே மணிமூர்த்தீஸ்வரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற உச்சிஷ்ட கணபதி கோவிலுக்கும் குடும்பத்துடன் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோஜா கூறியதாவது: "எனது கணவரின் உதவியாளர் திருமணம் ஆலங்குளத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காகக் குடும்பத்துடன் வந்திருந்தோம். அதனைத் தொடர்ந்து நெல்லையப்பர் கோவில், உச்சிஷ்ட கணபதி உள்ளிட்ட கோவில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தோம்.

கார்த்திகை மாதம் முழுவதும் சிவன் கோவில்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கியுள்ளோம். மக்களுக்குப் பிடித்தமான நல்ல கதைக்களம் அமைந்தால் நிச்சயம் சினிமாவில் மீண்டும் நடிப்பேன்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.