தூத்துக்குடியில் உள்ள ஃபர்னிச்சர் கடையில் பணியாற்றி வந்த 40 வயது தொழிலாளி ஒருவருக்குக் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. தினமும் மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததால், கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதன் காரணமாக, கணவரைப் பிரிந்த மனைவி கடந்த சில ஆண்டுகளாக நெல்லை மாநகரப் பகுதியில் தங்கி, வீட்டு வேலைகள் செய்து தனது 14 வயது மகளை வளர்த்து வந்தார். தூத்துக்குடியில் வேலை பார்த்து வந்த அத்தொழிலாளி, தனது மனைவியைப் பார்ப்பதற்காக நெல்லைக்கு மாதத்திற்கு ஒருமுறை வந்து சென்றுள்ளார்.

அப்போது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி, தனது சொந்த மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் நடத்தையில் மாற்றத்தைக் கண்ட தாய், இது குறித்து விசாரித்த போது சிறுமி தனக்கு நேர்ந்த துயரத்தைக் கூறி அழுதுள்ளார். இது குறித்து தாய் அளித்த புகாரின் பேரில், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி, போக்ஸோ சட்டப் பிரிவு 7, 8 மற்றும் ஐபிசி 294 ஆகிய பிரிவுகளின் கீழ் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து, அக் கொடூரத் தந்தையைக் கைது செய்தார்.

இவ்வழக்கின் குற்றப்பத்திரிகை கடந்த 2024 ஏப்ரல் 16-ஆம் தேதி நெல்லை மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை நீதிபதி சுரேஷ்குமார் முன்பு நடைபெற்று வந்த நிலையில், அரசுத் தரப்பில் வழக்கறிஞர் உஷா ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றவாளியான சிறுமியின் தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் புலன்விசாரணை நடத்திச் சட்ட நடவடிக்கைகளை விரைவாகச் செயல்படுத்திய ஆய்வாளர் ஜெயலட்சுமி, பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாககுமாரி, உதவி ஆய்வாளர் ரேணுகா உள்ளிட்ட காவல் அதிகாரிகளை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.