திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் புதிய பைபாஸ் சாலையில், முத்தமிழ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற 5,000 பனை விதைகள் நடும் பசுமை இயக்க பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் தெரிவித்தாவது: திருநெல்வேலி மாவட்டத்தின் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் வளங்களைப் பாதுகாப்பதில் பனை மரங்களும், தாமிரபரணி ஆறும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசு மற்றும் சில அமைப்புகளின் பொறுப்பு மட்டுமல்ல, ஒவ்வொருவரும் தங்களது தனிப்பட்ட பொறுப்பாகக் கருதி செயல்பட வேண்டும்.

ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கு பிடித்த இரண்டு வகையான மரங்களைத் தேர்வு செய்து, ஒரு மரத்தை வீட்டிலும், மற்றொரு மரத்தை பள்ளியிலும் நட்டு, அவை நன்கு வளரும்வரை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். மரக்கன்றுகளை நடுவதுடன் நின்றுவிடாமல், அவற்றை முறையாகப் பராமரித்து வளர்ப்பதன் மூலம் மட்டுமே சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

மேலும், கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள், அக்கம் பக்கத்தினர் மற்றும் சமூகத்தினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வீடுகள் மற்றும் பொது இடங்களில் உருவாகும் கழிவுகளை முறையாகப் பிரித்து கையாளுதல், பொறுப்புடன் அகற்றுதல் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமரித்தல் ஆகியவற்றை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் தெரிவித்தார்.

PanaiCollector.jpg

இந்நிகழ்ச்சியில், துணை ஆட்சியர் (பயிற்சி) மு.பிரதீபா அவர்கள், சமூக ஆர்வலர் ‘கிரிக்கெட்’ மூர்த்தி, முத்தமிழ் பப்ளிக் பள்ளி முதல்வர் திருமதி மேரி ராணி, EGG Foundation-ஐச் சேர்ந்த நிவேக், பள்ளி மேலாளர் ராபின், முத்தமிழ் பப்ளிக் பள்ளி தலைவர் அமரவேல் பாபு, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.