திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் நவம்பர் 22-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தேசிய தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமிற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் செயல்படுத்தப்பட்டு வருவதால், கடந்த 16 ஆண்டுகளாக நாட்டில் போலியோ நோய் தாக்கம் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தக்கவைக்கும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 22.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஒரே தவணையாக தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமின் மூலம் மாவட்டத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட 1,09,092 குழந்தைகளுக்கும், 5 முதல் 6 வயது வரையிலான 12,255 குழந்தைகளுக்கும் என மொத்தம் 1,21,347 குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சுங்கச்சாவடிகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகள் உட்பட மாவட்டம் முழுவதும் 898 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம் நாளில் விடுபடும் குழந்தைகளுக்கு அடுத்த 7 நாட்களுக்குப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று சொட்டு மருந்து வழங்க உள்ளனர்.
இம்முகாம் பணிகளில் சுகாதாரத் துறையைச் சேர்ந்த 770 பணியாளர்கள், 700 செவிலியர் கல்லூரி மாணவர்கள், 385 சத்துணவுப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 2,057 பேர் என மொத்தம் 3,912 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இம்முகாமிலும் தவறாமல் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அருகிலுள்ள மையங்களுக்கு அழைத்துச் சென்று சொட்டு மருந்து புகட்டி, போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இக்கூட்டத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் லதா, மாவட்ட சுகாதார அலுவலர் முரளி சங்கர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

