திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வி.கே.புரம், சிவந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 31 வயது இளம்பெண் ஒருவர் பொறியியல் பட்டம் முடித்துள்ளார். இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் கச்சனாவிளையைச் சேர்ந்த ஜோன்ஸ் என்பவரின் மகன் ஜோன்ஸ் பிரின் (30) என்பவருக்கும் இடையே மேட்ரிமோனி செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கோவை துடியலூர் பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்த ஜோன்ஸ் பிரினும், அந்த இளம்பெண்ணும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதனிடையே, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், சூப்பர் மார்க்கெட்டை அபிவிருத்தி செய்துவிட்டுத் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் ஜோன்ஸ் பிரின் கூறியுள்ளார். இதனை நம்பிய இளம்பெண், தனது மற்றும் தனது தாயாரின் நகைகளை அடகு வைத்தும், வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்தும், மகளிர் குழு மூலம் கடன் பெற்றும் சுமார் ரூ.10 லட்சம் வரை கொடுத்து உதவியதாகக் கூறப்படுகிறது.
பணம் கொடுத்த பின் திருமணம் குறித்து இளம்பெண் கேட்டபோது, ஜோன்ஸ் பிரின் மற்றும் அவரது தாயார் ஜோதி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, மேலும் ரூ.10 லட்சம் கொடுத்தால் மட்டுமே திருமணம் நடக்கும் என்றும், இல்லையென்றால் விலகிக் கொள்ளுமாறும் மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில், ஜோன்ஸ் பிரினுக்குத் தூத்துக்குடி வடக்கூரைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நாளை (செவ்வாய்க்கிழமை) திருமணம் நடைபெற இருப்பது இளம்பெண்ணிற்குத் தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண், உடனடியாக வி.கே.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஜோன்ஸ் பிரின் மற்றும் அவரது தாயார் ஜோதி மீது வழக்குப் பதிவு செய்து, நேற்று ஜோன்ஸ் பிரினைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

