திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், முன்னீர்பள்ளம் டாஸ்மாக் குடோன் போன்ற இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் போன்ற புகார்களுக்கு விரைவாக விசாரணைகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாகத் தீர்வு காண்பதற்கும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பான புகார்களைத் துரிதமாக விசாரிக்கவும் தமிழ்நாடு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் திறம்பட செயல்பட்டு வருகின்றன.
பாதிக்கப்படும் பெண்கள் எந்தவித அச்சமும் தயக்கமும் இன்றித் தங்களின் புகார்களைத் தெரிவிக்கும் வகையில், இந்த காவல் நிலையங்களில் உள்ள அனைத்து அதிகாரிகளும் காவலர்களும் பெண்களாகவே நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழ்நாடு அரசு சிங்கப்பெண் காவல்படையினை நியமித்து, பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தினை பார்வையிட்டு, ஆய்வு செய்யப்பட்டது.
அவசர காலங்களில் தீயணைப்புத் துறை எந்த அளவுக்குத் தயார் நிலையில் உள்ளது என்பதையும், அங்குள்ள அதிநவீன மீட்பு உபகரணங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக, தீயணைப்பு வாகனங்கள் (Fire Tender), அதிக அழுத்த ஹோஸ் குழாய்கள் மற்றும் பல்வேறு வகையான தீயணைப்புக் உருளைகளின் (Fire Extinguishers) பராமரிப்பு நிலை குறித்தும், தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் தீ தடுப்பு உடைகள் (Turnout Gear), பாதுகாப்பு தலைக்கவசங்கள் மற்றும் அடர்ந்த புகையில் சுவாசக் காற்றை வழங்கும் சுவாசக் கருவிகளின் (SCBA) நிலை குறித்தும், விபத்துகளின் போது பயன்படும் நீரியல் வெட்டுபவை (Hydraulic Cutters - Jaws of Life), உயர்மட்ட ஏணிகள், மற்றும் வெள்ளப் பெருக்கு மீட்புப் பணிகளுக்கான மிதவை வளையங்கள், கயிறுகள் ஆகியவற்றின் செயல்பாடுகளை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், அவசரக் காலத்தில் காயமடைவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கத் தேவையான முதலுதவிப் பெட்டிகள், ஸ்ட்ரெச்சர்கள் மற்றும் இரவு நேரத் தேடல் விளக்குகளின் எண்ணிக்கை தொடர்பாகவும், பேரிடர் மற்றும் தீ விபத்து காலங்களில் பொதுமக்கள் அழைத்த சில நிமிடங்களிலேயே விரைந்து செயல்பட்டு உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகள், இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்கள், மாணவர்கள் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்து விழிப்புணர்வுப் பயிற்சிகளை வழங்க துறை அலுவலர்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மதுபான சேமிப்பு குடோனில் மதுபானங்களின் வரத்து, இருப்பு மற்றும் மதுபானக் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுவது குறித்தும் முன்னீர்பள்ளம் மதுபான சேமிப்பு கிடங்கிற்கு மதுபான சரக்குகள் வரப்பெற்றது குறித்தும், கிடங்கிலிருந்து தினமும் வெளியே செல்லும் சரக்குகள் குறித்தும் கணினி வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவது தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் தற்போது கடை மேற்பார்வையாளர்கள் மூலம் தேவையான மதுபானங்களுக்கான ‘இன்டென்ட்’ (Indent) வழங்கப்பட்டு, அதனடிப்படையில் குடோன்களில் இருந்து சரக்குகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த முறையினை மாற்றி, சென்னை தலைமையகத்தில் இருந்து கடைகளுக்குத் தேவையான சரக்குகள் கணினி வழியாகக் கண்டறியப்பட்டு, ஆன்லைன் முறையில் குடோன்கள் மூலம் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இதன் மூலம், ஒவ்வொரு கடையிலும் பணிபுரியும் ஊழியர்கள் தனியாக ‘இன்டென்ட்’ வழங்க வேண்டிய அவசியம் குறைவதுடன், கடைகளின் இருப்பு நிலைக்கு ஏற்ப தேவையான மதுபானங்களைத் திட்டமிட்ட முறையில் விநியோகிக்க முடியும்.
எனவே, நவீன தகவல் தொழில்நுட்பத்தைக்கொண்டு, ஆன்லைன் வாயிலாக புதிய மென்பொருள் உருவாக்கி, அதன் வாயிலாக பணிகளை மேற்கொள்வது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார். ஆய்வில், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் பானுபிரியா, உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன், வட்டாட்சியர் வெங்கடாசலம் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

