மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட தனது பைபர் படகுக்கு உரிய இழப்பீடு மற்றும் வாழ்வாதார உதவி வழங்குமாறு கோரி, குலசேகரன்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனு அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஊராட்சி மாடசாமிபுரத்தைச் சேர்ந்தவர் பண்டாரம் மகன் ரஞ்சித்குமார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: "குலசேகரன்பட்டினம் ஊராட்சி மாடசாமிபுரத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம்; எங்களது வாழ்வாதாரம் கடல் தொழிலாகும்.
இந்நிலையில், கடந்த 21-11-2026 நள்ளிரவு சுமார் 12.30 மணிக்கு எனது பைபர் படகை மாடசாமிபுரம் கடற்கரையோரத்தில் நிறுத்தி வைத்திருந்த நிலையில், மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். தகவல் அறிந்து நானும் எங்கள் ஊர் மக்களும் சென்று பார்த்தபோது தீ முழுவதுமாக எரிந்து கொண்டிருந்தது. தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, தீயணைப்பு வண்டி வந்து தீயை முழுவதுமாக அணைத்தனர்.
இதில் எனது பைபர் படகு முற்றிலுமாக எரிந்து உருக்குலைந்து போனது. எனது படகின் அருகில் இருந்த மற்றொரு படகும் எரிந்துள்ளது. இது தொடர்பாகக் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பைபர் படகை வைத்துத்தான் எனது குடும்பத்தை நடத்தி வந்தேன். இந்த நிலையில் இச்சம்பவத்தால் எனது மனைவி, குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினரை எப்படி வாடி வைப்பேன் எனத் தெரியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே, மாவட்ட ஆட்சியர் என் மீது கருணை கொண்டு என் குடும்பத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் உதவி செய்திடவும், அரசின் சார்பிலான இழப்பீட்டைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

