தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வடக்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் மாரிமுத்து (33). இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி (25). இவர்களுக்கு மதுபாலா (2) என்ற பெண் குழந்தை இருந்தது.
மாரிமுத்து தனது சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் கொடை விழாவில் பங்கேற்பதற்காகக் குடும்பத்துடன் ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில், நேற்று இரவில் கயத்தாரில் நடைபெற்ற பொருட்காட்சியைப் பார்ப்பதற்காக மனைவி தனலட்சுமி மற்றும் குழந்தை மதுபாலாவைத் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.
பொருட்காட்சியைப் பார்த்துவிட்டு இரவு 10 மணியளவில் மாரிமுத்து மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் மீண்டும் வடக்கு சுப்பிரமணியபுரத்திற்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். கயத்தாறு பஜார் பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த தனலட்சுமி மற்றும் குழந்தை மதுபாலா ஆகிய இருவர் மீதும் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக மாரிமுத்து லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கயத்தாறு காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த தாய் மற்றும் மகளின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கண் எதிரே மனைவி மற்றும் குழந்தையைப் பறிகொடுத்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

