தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, இடதுசாரி விவசாயிகள் சங்கங்கள் சார்பில் ஆலோசனைக்கூட்டம் தூத்துக்குடி சி.பி.ஐ.எம். அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி (சி.பி.ஐ.) தலைமை தாங்கிய இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர்கள் பா. புவிராஜ் (சி.பி.ஐ.எம்.), லெனின்குமார் (சி.பி.ஐ.), அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் முருகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நம்பிராஜன், தி. சீனிவாசன், ஐ. கணபதி, எஸ். மணி, பிச்சை, சுப்புத்துரை, வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு தனது தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், சாகுபடி நடந்து வரும் சூழலில் நிபந்தனை இன்றி புதிய கடன் வழங்கிட வேண்டும். 2025-26ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

விவசாயப் பயிர்களை அழித்து வரும் காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைகளின் கரைகளைப் பலப்படுத்திடவும், மழைநீர் வடிகால் வாய்க்கால்களைத் தூர்வாரிடவும் வேண்டும்.

விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மறைமுக முயற்சியாகக் கருதப்படும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21.10.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய போராட்டத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய மூன்று மையங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என இக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.