திருநெல்வேலி மாவட்டம் தெற்கு வள்ளியூர் கிராமத்தைப் போதை இல்லாத கிராமமாக உருவாக்கப் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன் கேட்டுக்கொண்டார்.

தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் 158-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டுத் நெல்லை மாவட்டத்திலுள்ள அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் இன்று (அக்டோபர் 2) கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

இதன் ஒரு பகுதியாக, வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் தெற்கு வள்ளியூர் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் முத்தரசி தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய ஆட்சியர், "பொதுமக்கள் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரித்து வழங்க வேண்டும். பருவமழைக் காலம் தொடங்கவுள்ளதால், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் சுயமாக மருந்து உட்கொள்வதைத் தவிர்த்து, உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலைய அணுக வேண்டும்" என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், "போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்களின் எதிர்காலத்தையும் சமூகப் பாதுகாப்பையும் பாதிக்கிறது. எனவே தெற்கு வள்ளியூரைப் போதை இல்லாத கிராமமாக மாற்ற பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும். கிராமத்தில் போதைப்பொருள் விற்பனை அல்லது பயன்பாடு குறித்துத் தகவல் தெரிந்தால் தயக்கமின்றி அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வின் நிறைவில், குழந்தை திருமணத்தைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கி ஓத, அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இக்கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் பொன்னியின் செல்வம், வேளாண்மை இணை இயக்குநர் பூவண்ணன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் (தெற்கு) இங்கர்சால், மாவட்ட ஊராட்சிச் செயலர் இசக்கியப்பன், ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் அன்பு லீலா மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.