தூத்துக்குடி மாவட்டம் மூக்குப்பீறி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி மகன் ஜெபராஜ் (60). இவரது மனைவி சகிலா மற்றும் மகன் ஜோன்ஸ் ஆகியோர் வெள்ளாளன்விளையில் வருகின்றனர். குடும்பப் பிரச்சனை காரணமாக, ஜெபராஜ் கடந்த 6 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஜெபராஜ் தனது பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.அதன்பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாகக் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தான்குளம் காவல்நிலைய போலீசார், வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஜெபராஜ் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்தார்.

உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அவர் இறந்து சில நாட்கள் ஆகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.