தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணி ஊரைச் சுற்றியுள்ள கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி பொட்டலூரணி மக்கள் நீண்டகாலமாகத் தொடர்ந்து பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று தூத்துக்குடியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஈ.சங்கரநாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பொறுப்பாளர்கள் சண்முகம், இராதாகிருஷ்ணன், ஈஸ்டர் அந்தோணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டங்க்ஸ்டன் எதிர்ப்புப் போராட்க் குழு ஒருங்கிணைப்பாளர் கம்பூர் செல்வராஜ், இந்தியப் பொதுஉடைமைக் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் சகாயராஜ், தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஐகோ, தமிழ்த் தேசிய மக்கள் விடுதலைக் கழகத்தின் கோப்பெருஞ்சோழன், தமிழ்த் தேசியப் பேரவையின் மணிமாறன், மக்களதிகாரக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் செல்வம் துணைச் செயலாளர் தமிழ்வேந்தன், சமூக ஆர்வலர்கள் வைகுண்டமாரி, லிட்டில்ராஜ், சங்கரலிங்கம், போராட்டக்குழு முன்னணியாளர் தோழர் இராமகிருட்டிணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மற்றும் திரளான பொட்டலூரணி பொதுமக்கள் பங்கேற்றனர்.

துர்நாற்ற‌ம் வீசிச் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவித்துவரும் பொட்டலூரணி பகுதியிலுள்ள மூன்று கழிவுமீன் நிறுவனங்களையும் உடனடியாக மூட வேண்டும், பரந்தூர், மேல்மா விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்றதுபோல, சுற்றுச்சூழல், விவசாயத்தைக் காப்பதற்காகவும் அடிப்படைத் தேவைகள் கோரியும் போராடிய பொட்டலூரணி மக்களின்மீது 2021 – 2026 காலகட்டத்தில் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் இந்த அரசு திரும்பப்பெற வேண்டும்.

பொட்டலூரணி ஊரைச் சார்ந்த ஆசிரியர் ஈ.சங்கரநாராயணன் மீது கடந்த அரசு மேற்கொண்ட துறை நடவடிக்கைகள் அனைத்தையும் கைவிட்டு, மீண்டும் அதே பணியிடத்தில் அவரைப் பணியமர்த்த வேண்டும், பொட்டலூரணி மக்கள் நீண்டகாலமாகக் கோரும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உரிய அலுவலர்களைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.