தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம், கீழஅரசடி ஊராட்சிக்கட்பட்ட துப்பாஸ்பட்டி - அய்யனார்புரம் பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக மூடிச் சீல் வைக்கக்கோரி பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

துப்பாஸ்பட்டி மற்றும் அய்யனார்புரம் பகுதியைச் சேர்ந்த எம். அசோக்குமார் தலைமையில் ஊர்ப் பொதுமக்கள் இன்று (02.11.2026) அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: "எங்கள் கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட உழைக்கும் எளிய குடும்பங்கள் வசித்து வருகிறோம். பெரும்பாலானோர் தினக்கூலி மற்றும் உப்பளத் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக, எங்கள் பகுதிப் பெண்கள் அதிகாலை 2 மணிக்கே உப்பள வேலைக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

இந்நிலையில், பேருந்து நிறுத்தம் மற்றும் கடலோரக் காவல் சோதனைச் சாவடி அருகிலேயே புதிதாகக் கடை எண்: 10060 கொண்ட அரசு டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு மது அருந்துவோர் மதுபாட்டில்களை உடைத்துப் போடுவதும், ஆடையின்றி நிர்வாணக் கோலத்தில் கிடப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இதனால் அதிகாலையில் வேலைக்குச் செல்லும் பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது."

மேலும், இப்பிரச்சனை குறித்து அறப்போராட்டம் நடத்தியபோது 50-க்கும் மேற்பட்ட ரவுடிகள் வந்து சூழ்ந்துகொண்டு அச்சுறுத்தியபோதும், அங்கிருந்த காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்தாமல் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டனர். தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் ஆகியோர் ஜனநாயக வழியில் ஆதரவு தெரிவித்தவர்களை நோக்கிப் பொதுவெளியில் மிகக் கொச்சையான வார்த்தைகளைப் பேசி அத்துமீறி நடந்துகொண்டனர்.

கூலிப்படையினரின் மிரட்டல் தொடர்ந்து வந்த நிலையில், இதன் உச்சக்கட்டமாகக் கடந்த 01.11.2026 அன்று கொடூரமான கொலைச் சம்பவம் ஒன்றும் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் அனைவரும் தங்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழலில் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே, கிராமப் பகுதிகளில் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாவண்ணம் உடனடி காவல் துறைப் பாதுகாப்பு மற்றும் தீவிர இரவு ரோந்துப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.