நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படத்தின் பாடலில் சூஃபி இசையைப் பயன்படுத்தியதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்குச் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படம் வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் உலகப் புகழ்பெற்ற ஹான்ஸ் ஜிம்மர் (Hans Zimmer) இணைந்து இசையமைத்துள்ளனர்.
இப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா அமேசான் மியூசிக் சார்பில் கடந்த அக்டோபர் 22-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ராமர் மற்றும் சீதையின் தெய்வீகப் பிணைப்பையும் அவர்களின் பயணத்தையும் சித்தரிக்கும் வகையில் அர்ஜித் சிங் மற்றும் ஷ்ரேயா கோஷல் பாடிய 'மங்கள் ரங்' பாடல் நேற்று வெளியானது.
இப்பாடலின் ஒரு பகுதியில், இஸ்லாமிய மெய்யியல் தத்துவ மரபில் உருவாகும் 'கவ்வாலி' (Qawwali) வகை சூஃபி இசையை ஏ.ஆர். ரஹ்மான் பயன்படுத்தியுள்ளார்.
இந்து சமயத்தின் புனித இதிகாசக் கதையை மையமாகக் கொண்ட திரைப்படத்தில், சூஃபி இசையை இடம்பெறச் செய்தது பொருத்தமானது அல்ல என்று இணையதளங்களில் நெட்டிசன்கள் பலரும் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
வணிக நோக்கத்திற்காகப் பண்பாட்டு வரலாற்றைத் தவறாகச் சித்தரிப்பது சரியல்ல என்றும், இதிகாசக் கதைக்களத்தின் புனிதத் தன்மையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.

