மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் தவெக மிகவும் பின்தங்கியுள்ளதால் முதலமைச்சர் விஜய்க்குத் தோல்வி பயம் வந்துவிட்டது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் தவெகவின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. இதன் காரணமாகவே முதலமைச்சர் விஜய்க்குத் தோல்வி பயம் வந்துவிட்டது. அவருக்குச் சட்டமன்றத்திலும் பேசத் தெரியவில்லை, பிரச்சாரத்திலும் பேசத் தெரியவில்லை. பிரச்சாரக் கூட்டங்களில் எதை எதையோ மாற்றி மாற்றிப் பேசி வருகிறார்.

தவெகவை திமுக என்கிறார், பாஜகவை திமுக என்கிறார்; என்னதான் பேச வருகிறார் என்றே தெரியவில்லை. 'இந்தியா' கூட்டணியில் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் இருந்தன. ஆனால் இப்போது திமுக அதில் இல்லை. தவெக இந்த கூட்டணியில் இன்னும் எவ்வளவு நாட்கள் இருக்கப் போகிறது என்பதும் தெரியவில்லை.

தொடர்ந்து பேசிய அவர், உருவக் கேலி குறித்துக் கூறுகையில்: "ஒருவரை உருவக் கேலி செய்து பேசுவது மிகவும் தவறான பண்பாடு. முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எவ்வாறு பேசினார் என்பது தெரியவில்லை; அவர் ஒருவரை உருவக் கேலி செய்யும் நோக்கத்தில் பேசியிருந்தால் அது நிச்சயமாகத் தவறானதே.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை கோயில்களை ஆகம விதி உள்ள கோயில், ஆகம விதி இல்லாத கோயில் எனப் பிரித்துப் பிளவை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. அனைத்துக் கோயில்களிலும் ஒரே வகையான ஆகமத்தைப் பின்பற்றித்தான் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொய்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே தவெக ஆட்சிக்கு வந்தது. அதையே சமூக வலைதளங்களில் தவெகவினர் மீண்டும் மீண்டும் பொய் பிரச்சாரமாகச் செய்து வருகிறார்கள். எனவே, சமூக வலைதளங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்; இல்லையென்றால் நாளடைவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முந்தைய அரசு எடுத்த தவறான நிலைப்பாடே அவர்கள் ஆட்சியை இழக்கக் காரணமானது. திமுக 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி நடத்தியது. ஆனால், தவெக 5 ஆண்டுகள் ஆட்சியைத் தொடர்வதற்கு வாய்ப்பே இல்லை" எனத் தெரிவித்தார்.