சிறைச்சாலைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினரைத் தாக்கிவிட்டுத் தப்ப முயலும் கைதிகளைச் சுட்டுப் பிடிக்கலாம் எனச் சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் 200 கைதிகளை அடைக்க வசதிகள் உள்ள நிலையில், அங்கு 334 விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கைதி ஒருவர் வலிப்பு வந்தது போல் நடித்ததைத் தொடர்ந்து, அவருக்கு உதவச் சென்ற இரண்டாம் நிலை சிறைக்காவலர் ஸ்டாலின் பிரபுவைச் சிலர் சரமாரியாகத் தாக்கினர். தொடர்ந்து, சமையல் அறையிலிருந்த கரண்டிகளை ஆயுதமாக எடுத்துக்கொண்டு மற்றொரு காவலர் தங்கப் பாண்டியையும் தாக்கிச் சாவியைப் பறித்துக் கொண்டு 17 கைதிகள் சிறையை விட்டுத் தப்பியோடினர்.
இச்சம்பவம் குறித்து கண்டமனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.
ட்ரோன் கேமராக்கள் மூலம் மலைப்பகுதிகள் மற்றும் அடர்ந்த இடங்களில் தேடிய போலீசார், தப்பிய 17 பேரில் கருப்பசாமி, தருண்குமார், மாற்றுத்திறனாளி கைதி பிரசாந்த் உள்ளிட்ட 13 கைதிகளை 24 மணி நேரத்திற்குள் சுற்றி வளைத்துக் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். மீதமுள்ள 4 பேரைத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு:
புழல் மற்றும் தேனி சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிய சம்பவங்களைத் தொடர்ந்து, தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அனைத்துச் சிறைகளுக்கும் புதிய மற்றும் கடுமையான கட்டுப்பாட்டு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அனைத்துச் சிறை கண்காணிப்பு கோபுரங்களிலும் எந்நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும்.
சிறை வளாகத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டாலோ அல்லது போலீசாரைத் தாக்கிவிட்டுத் தப்ப முயன்றாலோ கைதிகளைச் சுட்டுப் பிடிக்கலாம். சிறைத்துறையின் இந்த அதிரடி உத்தரவு தமிழகச் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

