போக்சோ வழக்கில் குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்த பெண் தலைமைக் காவலர் மற்றும் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட காவல் துறையினருக்குத் திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் உட்கோட்டம், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில், நீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களைச் சமர்ப்பித்து குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தருவதற்கு உறுதுணையாகச் சிறப்பாகப் பணியாற்றியவர் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக் காவலர் ரா. ரேவதி.
இவரது சிறப்பான பணியைப் பாராட்டும் வகையில், திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு, இன்று அவரைத் திருநெல்வேலியில் உள்ள சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

கஞ்சா பறிமுதல் வழக்கில் பாராட்டு:
இதேபோன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, 14 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்ததோடு, குற்றவாளிக்கு நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தருவதற்குச் சிறப்பாகப் பணியாற்றிய உதவி ஆய்வாளர் ஐ. முத்துராஜா, தலைமைக் காவலர்கள் பாரதிகண்ணன், கனகராஜ், இரண்டாம் நிலைக் காவலர் தினேஷ்குமார் ஆகியோரையும் டி.ஐ.ஜி. பாராட்டிப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

