திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற 14ஆம் தேதி பொதுவிநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.

பொதுவிநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு ஒவ்வொரு மாதமும் திருநெல்வேலி மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை 14-11-2026 அன்று நடைபெறும் இக்குறைதீர் முகாமில் கீழ்கண்ட சேவைகளை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

1. புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல்அட்டை கோரி விண்ணப்பித்தல்.

2. குடும்ப அட்டையில் கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல்.

3. பொதுவிநியோகத்திட்ட கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் அளித்தல்.

4. தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் அளித்தல்.

குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கச் செல்லும் பயனாளர் உரிய ஆவணங்களான ஆதார் அட்டை, பிறப்பு / இறப்புச் சான்று குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள் ஆகியவற்றினை எடுத்து செல்ல வேண்டும். கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்வதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட கைபேசியினை கொண்டு செல்ல வேண்டும்.

மேற்படி முகாம் மற்றும் பொதுவிநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக பொது விநியோகத்திட்ட கட்டுப்பாட்டு அறை எண்:9342471314 மற்றும் சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலக கட்டணமில்லா தொலைபேசி எண்கள்.1967 மற்றும் 18004255901 ஆகிய எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.