தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளர் முத்து வீரப்பன் தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாழவல்லான் சுடுகாட்டுப் பகுதியில் சிலர் சட்டவிரோதமாகப் பணம் வைத்துச் சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்தைச் சுற்றி வளைத்த போலீசார், அங்குச் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பேரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் வாழவல்லான் குலாளர் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் வைரவசுவாமி (41), ஆத்தூர் கீழ சேந்தமங்கலம் பரதர் தெருவைச் சேர்ந்த மூக்கண்டி மகன் மாதிரமூர்த்தி (41) மற்றும் தெற்கு வாழவல்லான் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ஆனந்தகுமார் (45) என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட மூவரையும் காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ரூ.1,400 ரொக்கம் மற்றும் 52 சீட்டுகளைப் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.