தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 31-வது மாநில மாநாடு தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் மஹாலில் செப்டம்பர் 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டின் தொடக்கமாக பிரம்மாண்ட பேரணி, பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தூத்துக்குடி அண்ணா நகர் 12-வது தெருவில் இருந்து தொடங்கிய விவசாயிகள் சங்க பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வி.வி.டி. சிக்னல் பகுதியை அடைந்தது. இப் பேரணியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் திரளான விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பேரணியைத் தொடர்ந்து வி.வி.டி. சிக்னல் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். புவிராஜ் வரவேற்புரையாற்றினார்.

இப்பொதுக்கூட்டத்தில் அகில இந்திய பொதுச்செயலாளர் வி.ஜி. கிருஷ்ணன், துணைத் தலைவர்கள் ஹன்னன் முல்லா, சண்முகம், மாநிலப் பொதுச்செயலாளர் சாமி நடராஜன், பொருளாளர் பெருமாள், முகமது அலி, கே.பி. ஆறுமுகம், பி. பெருமாள், அனுராகவன், நம்பிராஜன் உள்ளிட்ட அகில இந்திய மற்றும் மாநில தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

கூட்டத்தில் பேசிய தலைவர்கள் வலியுறுத்தியதாவது: மத்திய பா.ஜ.க. அரசும், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள த.வெ.க. அரசும் தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளைக் கடுமையாகச் சாடிய தலைவர்கள், விவசாயத்தையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தினர்.