வீ த லீடர்ஸ் அமைப்பின் சார்பில், தென் தமிழகத்தின் வாழ்வாதாரமான தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்கும் உயரிய நோக்கில், தொடர்ந்து 10-வது வார ஞாயிற்றுக்கிழமையாகத் திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் உழவாரத் தூய்மைப் பணி தீவிரமாக நடைபெற்றது.

இத்தூய்மைப் பணியின் முக்கியப் பகுதியாகக் குறுக்குத்துறை படித்துறை பகுதியில் சிறப்புத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்பகுதியில் நீண்ட நாட்களாகக் குவிந்து கிடந்த மதுபாட்டில்கள், சோப்புக் கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் நெகிழிப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு, படித்துறை பகுதி முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டது.

இந்தச் சமூக நலத் தூய்மைப் பணியில் ஏராளமான சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் மகளிர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது களப் பங்களிப்பை வழங்கினர். இத்தூய்மைப் பணிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வீ த லீடர்ஸ் அமைப்பின் தன்னார்வலர் ச. வேல்கண்ணன் சிறப்பாகச் செய்திருந்தார்.

தூய்மைப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி தாமிரபரணி ஆற்றங்கரையைப் பார்வையிட்டு ஆய்வு செய்ய நேரில் வருகை தந்தார்.

அப்போது,வீ த லீடர்ஸ் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் அவரை நேரில் சந்தித்துப் பேசினர். சட்டமன்றப் பேரவையில் தாமிரபரணி ஆற்றின் பாதுகாப்பு, தூய்மைப்படுத்துதல் மற்றும் அதன் வரலாற்று முக்கியத்துவம் குறித்துத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருவதற்காக சௌமியா அன்புமணிக்குக் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.