தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நகரில் அறநிலையத் துறைக்கு உட்பட்ட பழமை வாய்ந்த ஸ்ரீ மீனாட்சி அம்பாள் உடனுறை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் அனைத்தும் அதே நாட்களில் இக் கோயிலிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு, தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இக் கோயிலுக்கு வந்த இளம்பெண் ஒருவர், வீடியோ எடுக்கத் தடை விதிக்கப்பட்ட கோயில் பிரகாரப் பகுதியில் நடனமாடி வீடியோ எடுத்து, அதனைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘ரீல்ஸ்’ ஆகப் பதிவிட்டுள்ளார்.
இது குறித்துத் தகவலறிந்த கோயில் செயல் அலுவலர் உமா மகேஸ்வரி, விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், "கோயில் பிரகாரத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்கத் தடை விதிக்கப்பட்டு, அதுகுறித்த அறிவிப்புப் பலகையும் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையை மீறி வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டு, கோயிலின் மாண்பைக் கெடுத்த சம்பந்தப்பட்ட இளம்பெண் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இப்புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

