தேனி சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பிய நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சிறைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டியில் மாவட்ட சிறை அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் விசாரணை கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டது போல நாடகமாடி, சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி உத்தரவின் பேரில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள சிறைகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நெல்லை மாநகரில் அமைந்துள்ள பாளையங்கோட்டை மத்திய சிறை, கொக்கிரகுளம் மகளிர் சிறை மற்றும் மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி, அம்பை உள்ளிட்ட கிளைச் சிறைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அருகே பேரூரணியில் உள்ள மாவட்ட சிறை, ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள கிளை சிறைகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் கிளை சிறைகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட எஸ்பி விஷ்வேஸ் பா.சாஸ்திரி உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தீவிர வாகனத் தணிக்கை நடத்தப்பட்டது. சந்தேகத்திற்கு இடமான நபர்கள் மற்றும் வாகனங்களைத் தீவிரமாகக் கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

நெல்லை மாநகரப் பகுதிகளில் போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின் பேரில், போலீசார் விடிய விடிய ரோந்து சென்று கண்காணித்தனர். மேலும், அனைத்துச் சிறைகள் மற்றும் கிளை சிறைகளிலும் டிஎஸ்பிகள் மற்றும் தனிப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.