தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முதல் பெய்யத் தொடங்கியுள்ளது. பரவலாக மழை பெய்ததால் திற்பரப்பு, குற்றாலம், கும்பக்கரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நாளை அதிக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.15-ஆம் தேதி தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது. அதன் படி நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று மழை கொட்டியது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் நேற்று மதியம் வரை தண்ணீர் விழவில்லை. நேற்று மாலையில் பெய்த பலத்த மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும், மாலை 6 மணிக்குப் பிறகு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

சங்கரன்கோவில் பகுதியில் நேற்று மாலை 4 மணிமுதல் 6 மணிவரை பெய்த மழையால், தாழ்வான பகுதிகளிலும், சாலை ஓரங்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்துது. அங்குள்ள சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள் தண்ணீர் தேங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மதியத்திற்குப் பிறகு இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால், பெருங்குளம் குப் பின்னர் பீச்சி பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு 1,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தது. பாலாமோர் மழைப் பகுதியில் பெய்த கனமழையால் திற்பரப்பு அருவியில் நேற்று மாலை திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி பகுதியில் நேற்று மாலை 6.30 மணிக்கு மேல் இடியுடன் தொடங்கியது பலத்தமழை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்த மழை காரணமாக பழநி மலைக்கோவிலுக்குச் செல்லும் பாதையில் மழைநீர் அருவி போல் கொட்டியது.

வடகிழக்கு பருவமழை தொடர்பாக செய்தியாளர்களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர். துரை நேற்று கூறியதாவது: "நாடு முழுவதிலும் இருந்து தென் மேற்கு பருவமழை 15-ஆம் தேதி (நேற்று) விலகியுள்ளது. கடந்த செப்.30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த தென் மேற்கு பருவமழை காலத்தில் 21 சதவீதம் மழை குறைவாக கிடைத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை விலகியதைத் தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா, கேரளம், மாஹே ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.

நாளை (அக்.17) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், திருச்சி, திருநெல்வேலி, நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.