தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது மற்றும் பல்வேறு இடங்களில் சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளைத் தொடங்குவது தொடர்பான மாவட்டச் சுற்றுலா வளர்ச்சிக் குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில அரசின் சுற்றுலாத் துறை திட்டங்களின் கீழ் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் அடிப்படை வசதிகளைச் அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
திருச்செந்தூர் நகராட்சிப் பகுதிகள், விளாத்திகுளம் வட்டம் வேம்பார் கடற்கரை, பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக் கோட்டை, குதிரைமொழித்தேரி கற்குவேல் அய்யனார் திருக்கோவில் வளாகம், சாத்தான்குளம் சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா திருத்தலம் மற்றும் ஒட்டப்பிடாரம் வெள்ளப்பட்டி கடற்கரை ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல்.
திருச்செந்தூர் பகுதியில் நவீன சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை அமைத்தல். பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் மணப்பாடு கடற்கரையில் நீர் சாகச விளையாட்டுகளைத் தொடங்குதல். வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக் கோட்டைக்கு அருகில் செல்லும் மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் கால்வாய் அமைத்தல் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்டச் சுற்றுலா அலுவலர் சீதாராமன், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

