தெற்கு ரயில்வே சார்பில் ரயில் தண்டவாளம், சிக்னல் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்புப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாகத் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பல்வேறு ரயில்கள் முழுமையாகவும், சில ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சில ரயில்கள் மாற்றுப் பாதையில் இயங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்பட்ட ரயில்கள் விவரம்:

ரயில் எண் 56004: திருச்செந்தூரில் இருந்து தினமும் காலை 10.10 மணிக்கு நெல்லைக்குப் புறப்படும் பயணிகள் ரயில்.

ரயில் எண் 56003: நெல்லையில் இருந்து தினமும் மாலை 4.30 மணிக்குத் திருச்செந்தூருக்குப் புறப்படும் பயணிகள் ரயில்.

மேற்கண்ட இரு பயணிகள் ரயில்களும் வரும் செப்டம்பர் மாதம் 22, 23, 24, 25, 28, 29 மற்றும் 30 ஆகிய 7 நாட்களும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2 வாரங்களுக்கும் மேலாக இந்த பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் 7 நாட்களுக்குச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகள் மற்றும் பக்தர்களிடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.