தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
குலசேகரன்பட்டினம், உடன்குடி, மணப்பாடு, மாதவன் குறிச்சி, சிறுநாடார் குடியிருப்பு மற்றும் திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று அதிகாலையில் தொடங்கி கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
குலசேகரன்பட்டினம் காவல் நிலையம், முத்தாரம்மன் கோவில் மற்றும் பிரதான சாலைகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கியது. முத்தாரம்மன் கோவில் சன்னதி தெருவில் மழைநீர் தேங்கியதால் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதேபோல் விளாத்திகுளம், எட்டயபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில்,திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாகப் பல பள்ளிகளின் வளாகங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் சிரமத்தைத் தவிர்க்கும் வகையிலும், பாதுகாப்பு நலன் கருதியும் திருச்செந்தூர் தாலுகாவில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 26) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

