அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கோவில் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித திர்த்ததில் நீராடி சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று சுப முகூர்த்த தினம் என்பதால், கோவில் வளாகம் சண்முக விலாச மண்டபம் உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.

கோவில் சண்முக விலாச மண்டபத்திற்குள் திருமணம் நடைபெறுவதற்கு காத்திருந்த ஜோடிகளை ஒவ்வொரு ஜோடியாக கோவில் நிர்வாகம் உள்ளே அனுமதித்தனர். இதனால் சுபமுகூர்த்த நேரம் கடந்து திருமணம் நடைபெறக்கூடிய நிலை ஏற்படும் என திருமண ஜோடிகள் வேதனை அடைந்தனர்.

இதனால் ஒரு சில திருமண ஜோடிகள் சண்முகவிலாச மண்டபத்தில் வைத்து திருமணம் செய்யாமல் கோவில் வளாகத்தில் பல்வேறு இடங்களில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். சமூக ந்லன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.