கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 90-வது நினைவு நாளினை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகராட்சி டவுணில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.முருகன் ஆகியோர் இன்று (18.11.2026) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் ஆட்சியர் கூறுகையில், "ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை வீழ்த்திட “சுதந்திரப்போராட்ட முழக்கத்தை ஏற்படுத்தியவர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார். அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அன்னாரது நினைவு நாள் தியாக திருநாளாக கடைபிடிக்கப்பட்டு, ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
வ.உ.சிதம்பரனார் அன்றைய கால வழக்கப்படி திண்ணைப் பள்ளிகூடத்தில் படிப்பை ஆரம்பித்தார். இரவு நேரங்களில் ஆங்கிலக் கல்வியும் பயின்றார். வசதியான குடும்பத்தில் பிறந்த வ.உ.சிதம்பரனார் நன்றாக படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்று ஒழுக்கம் வாய்மை, பிறர் நலம் பேணல் ஆகிய நற்குணங்களைப் பெற்று, அவற்றை வாழ்வின் குறிக்கோள்களாக கொண்டிருந்தார். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், வணிக ரீதியாகவும் வீழ்த்திட ‘சுதேசி நேவிகேஷன் கம்பெனி” என்ற கப்பல் கம்பெனியைத் தொடங்கினார் அதனாலேயே கப்பலோட்டிய தமிழர் என்று புகழ்ப் பெற்றார்.
அதன்படி, நம் தேசத்தின் விடுதலைக்காகத் தம்மையே அர்ப்பணித்தும் அயராது பாடுபட்டும், தாய் நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்து, மறைந்தும் மக்களின் மனங்களில் என்றும் நிறைந்து வாழ்கின்ற கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 90-ஆவது நினைவு நாளை தியாகத் திருநாளாக அன்னாரது திருவுருவச் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.வித்யா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ம.கயிலைச்செல்வம், திருநெல்வேலி வட்டாட்சியர் மாரிமுத்துகுமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ம.ச.மகாகிருஷ்ணன் உட்பட அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

