தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நடப்பு அக்டோபர் மாதத்தில் மட்டும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 327 தெருநாய்களுக்கு விலங்குகள் நலக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் (ABC) வெற்றிகரமாகக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும், 1,449 தெருநாய்களுக்கு ரேபிஸ் எனப்படும் வெறிநோய் தடுப்பூசி (ARV) செலுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதுடன், வெறிநோய் பரவுவதைத் தடுக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வாரந்தோறும் சனிக்கிழமையன்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, தெருநாய்கள் பிடிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பொதுமக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் தெருநாய்களுக்கு உணவு வழங்கும்போது, மாநகராட்சி நிர்வாகத்தால் இதற்காகப் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ள 36 இடங்களில் மட்டுமே உணவளிக்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை மற்றும் பிற புகார்களைத் தெரிவிக்க விரும்புவோர் 1800 203 0401 (கட்டணமில்லாத் தொலைபேசி எண்) அல்லது 94432 04030 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

