தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான உதவி மற்றும் வழிகாட்டுதல் வழங்க 'ஆதரவு நபர்கள்' (Support Person) தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதியான நபர்கள் மாவட்ட இணையதளம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து விண்ணப்பங்களைப் பெற்று, வரும் நவம்பர் 30-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO) 2012-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான உதவி, ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் வழங்கத் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 'ஆதரவு நபர்கள்' (Support Person) தேர்வு செய்யப்பட்டுப் பட்டியலிடப்பட உள்ளனர். இதற்காகத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிக்கு விண்ணப்பிப்போர் சமூகப்பணி, சமூகவியல், சட்டம், உளவியல், குழந்தை மேம்பாடு, குழந்தை நலன் அல்லது சுகாதாரம் ஆகிய தொடர்புடைய துறைகளில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது இளநிலை பட்டத்துடன் குழந்தை கல்வி, வளர்ச்சி, சுகாதாரம் அல்லது பாதுகாப்புப் பணிகளில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
மேலும், குழந்தை உரிமைகள் அல்லது குழந்தை பாதுகாப்பில் பணியாற்றும் நபர்கள், குழந்தைகள் இல்லம் அல்லது பாதுகாப்பு இல்லங்களில் பணிபுரிவோர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணிபுரியும் பணியாளர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தினைத் தூத்துக்குடி மாவட்ட இணையதளத்திலிருந்து (https://thoothukudi.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் கல்வித் தகுதி, பணி முன் அனுபவம் மற்றும் இதர சான்றிதழ்களை இணைத்து, "மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண் 176, முத்துச்சுரபி பில்டிங், மணி நகர், பாளை ரோடு, தூத்துக்குடி" என்ற முகவரியில் வரும் 30.11.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் கிடைக்குமாறு சமர்ப்பிக்க வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் இந்த நியமனம் அமையும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

