மொழிபெயர்ப்புக் குளறுபடிகள் மற்றும் கற்பனை எழுத்தாளர் பெயர்களுடன் அச்சிடப்பட்ட இப்புத்தகங்களின் மதிப்பு சுமார் ரூ. 33.63 லட்சம் எனத் தெரியவந்துள்ளது.

கோவை பெரியார் நூலகத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலிப் புத்தகங்கள் கண்டறியப்பட்டுப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் ஆய்வு நடத்தத் துறை அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டார்.

அதன்படி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட நூலகங்களில் அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் மொத்தம் 5,104 போலிப் புத்தகங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.

தென்காசி மாவட்ட மைய நூலகம், 2 சிறப்பு நூலகங்கள், 5 பகுதிநேர நூலகங்கள் உட்பட 113 நூலகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மாவட்ட மைய நூலகத்தில் 'அகல்விளக்கு' பதிப்பகம் மூலம் 2,200 புத்தகங்களும், 'பீனிக்ஸ்' பதிப்பகம் மூலம் 93 புத்தகங்களும் என மொத்தம் 2,293 போலிப் புத்தகங்கள் கண்டறியப்பட்டன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ. 28.50 லட்சம் ஆகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 113 நூலகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கடந்த 2 ஆண்டுகளில் 2,101 போலிப் புத்தகங்கள் வாங்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ. 3,99,006 ஆகும்.

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ள 91 நூலகங்களில் நடைபெற்ற சோதனையில், அகல்விளக்கு பதிப்பகம் சார்பில் வைக்கப்பட்டிருந்த 710 போலிப் புத்தகங்கள் அகற்றப்பட்டன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ. 1.14 லட்சம் ஆகும்.

இந்தப் போலிப் புத்தகங்கள் குறித்து மாவட்ட நூலகர் கூறுகையில், "இப்புத்தகங்களில் பல இடங்களில் எழுத்துப் பிழைகளும், வரிகள் மற்றும் பக்க எண்கள் முன்னுக்குப் பின்னாக மாறியும் உள்ளன. ஆங்கில நாவல்களை அப்படியே ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மொழிபெயர்த்து அச்சிட்டுள்ளனர். புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்தாளர்களின் பெயர்கள் உண்மையானவையா என்பதுகூட யாருக்கும் தெரியாது" என்றார்.

கண்டறியப்பட்ட போலிப் புத்தகங்கள் அனைத்தையும் நூலகங்களிலிருந்து தனியாகச் சேகரித்து அகற்றும் பணிகளில் நூலகத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.