தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சன்னதியில், கந்த சஷ்டி திருவிழா தூத்துக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மகமை பரிபாலன சங்க கட்டளை சார்பில் வரும் நவம்பர் 10-ஆம் தேதி தொடங்குகிறது.
திருவிழாவை முன்னிட்டு வரும் நவம்பர் 9-ஆம் தேதி மாலை 7 மணிக்கு முருகன் சன்னதி முன்பாகக் காப்புக்கட்டுதல் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.
தொடர்ந்து, 10-ஆம் தேதி காலை 7.25 மணிக்குக் கும்ப பூஜையும், 10.25 மணிக்குச் சிறப்பு அபிஷேகமும், நண்பகல் 12 மணிக்கு யாகசாலை பூஜை, பூர்ணாகுதி மற்றும் தீபாராதனைகளும் நடைபெறவுள்ளன. மாலை 7 மணிக்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வீதிஉலா எழுந்தருளலும், இரவு 9.15 மணிக்கு ஆறுமுக அர்ச்சனையும் நடைபெறுகின்றன.
கந்த சஷ்டி திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வாக நவம்பர் 15-ஆம் தேதி மதியம் 12.15 மணிக்கு ஆறுமுக அர்ச்சனையும், மாலை 4 மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்வும் நடைபெறுகின்றன. அதனைத் தொடர்ந்து மாலை 4.25 மணிக்குச் சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெறவுள்ளது. சூரசம்ஹாரம் முடிந்ததும் 6 நாட்கள் தீவிர விரதம் இருந்த பக்தர்கள் பானகம் அருந்தித் தங்களது விரதத்தை நிறைவு செய்வார்கள்.
நவம்பர் 16-ஆம் தேதி காலை 7.05 மணிக்கு ஸ்ரீ தெய்வானை அம்பாள் தபசு மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். மாலை 4.25 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி தபசு மண்டபத்திற்கு எழுந்தருளி காட்சி தருதலும், மாலை 6.05 மணிக்கு மாலை மாற்றுதல் வைபவமும் நடைபெறும். தொடர்ந்து, இரவு 8 மணிக்குச் சிவன் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, கோயில் கலையரங்கில் வைத்து நவம்பர் 9-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு 'ஞானத்திரள்' ஆசிரியர் செந்தமிழரசு சிவக்குமாரின் பக்திச் சொற்பொழிவு நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி, செல்வம் பட்டர், தூத்துக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மகமை பரிபாலன சங்கச் செயலாளர் எம்.எஸ்.எஸ். கந்தப்பன் பிள்ளை மற்றும் அறங்காவலர்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

