மும்பையில் நடைபெற்ற 4-வது 'ET Infra Global Ports & Shipping Awards 2026' விழாவில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்திற்கு 2 முக்கிய தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் முன்னிலையில், 2026 செப்டம்பர் 10 அன்று நடைபெற்ற விழாவில், ஆண்டின் பசுமைத் துறைமுகம், ஆண்டின் சிறந்த நவீன துறைமுகம் மற்றும் மின்மய மாற்றத் திட்டத்திற்கான விருது ஆகிய 2 விருதுகளை வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுஷாந்த் குமார் புரோஹித் பெற்றுக் கொண்டார்.

இந்தியாவின் முதல் 'Scope-2 கார்பன் வெளியேற்றமில்லா பெருந்துறைமுகம்' என்ற சான்றை பெற்றுள்ளது. தேவைப்படும் மின்சாரத்தில் 94% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெறப்பட்டு, நிகர கார்பன் வெளியேற்றம் 45% குறைக்கப்பட்டுள்ளது. மேலும், முதலாவது பசுமை ஹைட்ரஜன் முன்னோடித் திட்டம் மற்றும் பசுமை மெத்தனால் எரிபொருள் நிரப்பும் வசதிகளைச் செயல்படுத்தி வருகிறது.

'PortGPT' எனும் செயற்கை நுண்ணறிவு (AI) தளத்தை அறிமுகப்படுத்தியதோடு, 3D மாதிரி வரைபடம் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் செயல்பாடுகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் நாட்டின் முதல் மெய்நிகர் மாதிரியைச் செயல்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவாலின் வழிகாட்டலில் வ.உ.சி துறைமுகம் அடைந்து வரும் இந்த மைல்கல் சாதனைக்கு, துறைமுக ஊழியர்கள் மற்றும் வர்த்தகக் கூட்டாளிகளின் கூட்டுப் பங்களிப்பே காரணம் என்று துறைமுக ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.