இக்கூட்டத்திற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா மற்றும் மீன்வளம் - மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முன்னிலை வகித்தார்.
துறை வாரியாக அமைச்சர்கள் பிறப்பித்த முக்கிய உத்தரவுகள்:
உள்ளாட்சி & பொதுப்பணித்துறை: சமுதாயக் கூடங்கள், நிவாரண முகாம்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குளங்களில் ஏற்படும் உடைப்புகளை உடனடியாக அடைக்க மணல் மூட்டைகளை இருப்பு வைக்க வேண்டும். லஸ்கர்கள் (மதகு பணியாளர்கள்) எப்போதும் பணியில் இருக்க வேண்டும்.
மின்சாரத் துறை : சேதமடைந்த மின்கம்பங்கள், தாழ்வான மின்மாற்றிகளை உடனடியாக மாற்ற வேண்டும். போதிய அளவு கூடுதல் மின்கம்பங்கள் மற்றும் கம்பிகளை இருப்பு வைக்க வேண்டும்.
பொதுசுகாதாரம் & வருவாய்த்துறை: முதியவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளின் பட்டியலை முன்கூட்டியே தயார் செய்து, வெள்ளப் பெருக்குக்கு முன் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும். அவசியமான தடுப்பு மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும்.
மீன்வளத் துறை & காவல் துறை: புயல் எச்சரிக்கைகளை உடனுக்குடன் மீனவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். நீச்சல் வீரர்கள், படகுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். அசம்பாவிதங்களைத் தடுக்கத் தாழ்வான பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட வேண்டும்.
கல்வி & பிற துறைகள்: பள்ளிகளில் மின் இணைப்புகள், மழைநீர் வெளியேறும் குழாய்களைச் சரிபார்க்க வேண்டும். நிவாரணப் பணிகளுக்குத் தேவையான ஜேசிபி (JCP) மற்றும் கனரக வாகனங்களின் பட்டியலைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 36 பகுதிகள் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன (மிகவும் அதிகம் - 5, நடுத்தரம் - 11, குறைவு - 11).
பாதிக்கப்படும் மக்களைத் தங்க வைக்க 97 நிவாரண முகாம்களும், 4,300 முதல் பொறுப்பாளர்கள் (First Responders) மற்றும் தன்னார்வலர்களும் தயார் நிலையில் உள்ளனர். தேவையான 1,17,665 மணல் மூட்டைகளில் தற்போது 28,865 மூட்டைகள் கையிருப்பில் உள்ளதாகவும், மீதமுள்ள 88,800 மூட்டைகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ ஜி.வி.மார்க்கண்டேயன், கோவில்பட்டி எம்.எல்.ஏ கருணாநிதி, தூத்துக்குடி மேயர் பெ.ஜெகன், மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், சார் ஆட்சியர் ஆகாஷ் குப்தா, மற்றும் அனைத்து துறை அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

