கடந்த 2025-ஆம் ஆண்டு தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கங்கா பரமேஸ்வரி காலனியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் ராமகிருஷ்ணன் (57) என்பவரது வீட்டின் கதவை உடைத்து, உள்ளே இருந்த 23½ பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.
இத்திருட்டுச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சிப்காட் காவல் நிலையப் புலனாய்வுக் குழுவினர், தீவிர விசாரணை நடத்தி வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் பாண்டியன் (38) மற்றும் தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த சத்தியசீலன் மகன் பேரின்பநாதன் (22) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முழுமையாக நிறைவடைந்த நிலையில், நடுவர் விஜயராஜ்குமார் இன்று தீர்ப்பளித்தார்.
அத்தீர்ப்பில், இவ்வழக்கில் தொடர்புடைய இரண்டாவது எதிரியான பேரின்பநாதனை விடுதலை செய்தும், முதன்மை எதிரியான வேலூரைச் சேர்ந்த பாண்டியன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.

