தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கான 'பிஎம் ஸ்வநிதி' திட்டத்தினை விரைவாகச் செயல்படுத்துவது தொடர்பான வங்கியாளர்களின் கலந்தாலோசனைக் கூட்டம், மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதன்மை வங்கி மேலாளர், நகர் நல அலுவலர், பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்தின் கீழ் முதல் முறையாக ரூ.15,000 கடன் பெற்று அதனை முறையாகத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு, இரண்டாம் முறையாக ரூ.25,000 மற்றும் மூன்றாம் முறையாக ரூ.50,000 வங்கி மூலம் கடன் வழங்கப்படும். முதல் தவணை கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு வங்கியின் மூலமாக கிரெடிட் கார்டு வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் வியாபாரிகள் தங்களது வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண்ணுடன் விண்ணப்பிக்க வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கடன் உதவி வழங்கப்படும்.

சாலையோர வியாபாரிகள் இவ்வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் அனைத்து மண்டல அலுவலகங்களையும் காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நேரில் அணுகி இத்திட்டத்தில் பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.