கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தரமான கல்விச் சூழலை உறுதி செய்யும் நோக்கில், திருநெல்வேலி மாவட்டம் மருதகுளம் அரசு மாதிரிப் பள்ளியில் டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் ரூ.2,15,550 மதிப்பிலான மாணவர் நல வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்குத் தரமான கல்வியும் உயர்கல்விக்கான வாய்ப்புகளும் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் டி.எம்.பி. அறக்கட்டளை பல்வேறு கல்விசார் சமூகப் பொறுப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி மாவட்டம் மருதகுளத்தில் அமைந்துள்ள அரசு மாதிரிப் பள்ளியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 348 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம், சீருடை ஆகியவற்றுடன் நீட், ஜே.இ.இ. (உள்ளிட்ட சுமார் 30 போட்டித் தேர்வுகளுக்குச் சிறப்புப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இப்பள்ளி மாணவர்கள் பலர் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

இப்பள்ளி மாணவர்களின் ஆரோக்கியம், நலன் மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு உகந்த சூழலை உருவாக்கும் விதமாக, டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் ரூ.2,15,550 செலவில் இரண்டு 100 எல்.பி.எச். திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு அமைப்புகள் மற்றும் 100 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வசதிகளை அறக்கட்டளையின் இயக்கத் தலைவர் கே. அனந்த சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் டி.எம்.பி. அறக்கட்டளையின் நிர்வாக அலுவலர் சி.கே. ஜெய்சங்கர், பள்ளித் தலைமையாசிரியர் ஆர்.ஜே. பொன்னையா, திருநெல்வேலி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அ. சத்தியா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.