நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பெருமாள்குளத்தைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் ஜெயக்குமார் (24). அதே ஊரைச் சேர்ந்த பிரைட்ஸன் (25) என்பவருக்கும் இவருக்கும் இடையே சிசிடிவி கேமரா பொருத்தியது தொடர்பாக வாட்ஸ்அப்பில் அவதூறாகப் பேசியதால் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி பிரைட்ஸன், சம்பத் ராஜா (32), டார்லின் அருமை குமார் (26) மற்றும் காட்வின் டைட்டஸ் (30) ஆகிய 4 பேரும் சேர்ந்து ஆல்பர்ட் ஜெயக்குமார் மற்றும் அவரது அண்ணன் ஜான்சன் (32) ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த ஆல்பர்ட் ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துக் களக்காடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட 4-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி கதிரவன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கதிரவன் இன்று தீர்ப்பு வழங்கினார்: ஆல்பர்ட் ஜெயக்குமார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரைட்ஸன், சம்பத் ராஜா, டார்லின் அருமை குமார் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஜான்சனைக் கொல்ல முயன்ற குற்றத்திற்காக இவர்களுக்குத் தலா 3 ஆண்டுகள் கூடுதல் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
குற்றவாளிகள் மூவருக்கும் சேர்த்து மொத்தம் ரூ.19,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காட்வின் டைட்டஸ் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.

