நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (38). கடந்த 2013-ஆம் ஆண்டில் ஏலச்சீட்டு எடுப்பது தொடர்பாக இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று குமார் அம்பை சந்தைக்குச் சென்றுள்ளார்.

அப்போது மற்றொரு தரப்பைச் சேர்ந்த மாயம்பெருமாள் (60) மற்றும் காசி ஆகியோர் சேர்ந்து குமாரை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இது குறித்து அம்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில் காசிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், வழக்கு விசாரணையின் போது ஜாமீனில் வெளிவந்த மாயம்பெருமாள் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார்.

இதையடுத்து அவர் மீதான வழக்கு விசாரணை தனியாக நடைபெற்று வந்த நிலையில், தலைமறைவாக இருந்த மாயம்பெருமாளைப் போலீசார் சமீபத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கதிரவன் நேற்று இறுதித் தீர்ப்பளித்தார். அதில், மாயம்பெருமாளுக்குக் கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், கொலை செய்யப்பட்ட குமாரின் மனைவியை மிரட்டிய குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

இத்தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கண்ணன் ஆஜரானார்.